ஹலால் மற்றும் ஹராமான உணவுகள் தொடர்பான இஸ்லாமிய வழிகாட்டல்



இஸ்லாம் மார்க்கமானது மனித வள மேம்பாட்டிற்குச் சாதகமான சூழ்நிலை அமைய முதல் காரணிகளாக திகழும் உணவு முறைகளை‌ அனுமதிக்கிறது. அதுபோல மனித ஆரோக்கியத்தை அச்சுறுத்தும் உணவு முறைகளை‌த் தடுக்கிறது.

மனிதர்களின் ஊட்டச்சத்து குறையாமல் சமமான நிலையில் இருக்க, உணவுகளை இரு வகையாக  பிரிக்கின்றது.

அவை:

1) ஹலால் (சாப்பிட அனுமதிக்கப்பட்ட தூய்மையான உணவு).

 2) ஹராம் (சாப்பிட அனுமதிக்கப்படாத தூய்மையற்ற உணவு)

இதில் அல்லாஹ்வின் பெயர் கொண்டு அறுக்கப்பட்டு, அந்த மிருகங்களின் ரத்தம் உடலை விட்டு முழுமையாக வெளியேறிய பின்பு பெறப்படும் மாமிசங்கள் ஹலாலாகும். நேர்மையான முறையில் உழைத்து அதன் மூலம் பெறப்படும் உணவுகள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு அடித்தளமிடும் உணவுகளும் தூய்மையான (ஹலால்) உணவாகும்.

மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்; -2:168

அல்லாஹ் உங்களுக்கு அனுமதியளித்துள்ள (ஹலாலான) நல்ல பொருட்களையே புசியுங்கள்; -5:88.

இவ்வாறு திருமறை அல்குர்ஆன் உணவு பற்றி சில வழிகாட்டல்களை எடுத்தியம்புகின்றது.

இஸ்லாமியர்களுக்கு தடை செய்யப்பட்ட உணவு வகைகள் பற்றி நோக்கின்;

இஸ்லாமியர்கள் எவற்றையெல்லாம், உண்ணலாம் எவற்றையெல்லாம் உண்ணக்கூடாது என்று சில வரையறைகள் உள்ளன. அந்த வரையறைகளைக் கருத்தில் கொண்டு, தடை செய்யப்பட்ட உணவுகள் பற்றி அறிந்துக் கொள்ள முடியும்.

அந்த வகையில் தடை செய்யப்பட்ட உணவு வகைகளாக;

1.அசுத்தமான மற்றும் கெட்டுப்போன உணவுகள்.

2.மனிதனின் உடலையும் மனதையும் பாதிக்கக் கூடிய உணவுகள்.

3.தானாகச் செத்த விலங்குகளின் மாமிசங்கள். (கடல் வாழ் உயிரினங்களைத் தவிர்த்து)

4.விபத்துக்கள், விலங்குகளுக்கிடையிலா ன சண்டையில் செத்த விலங்குகளின் மாமிசங்கள்.

5.காவு கொடுக்கப்பட்ட, படையல், வழிபாடு செய்யப்பட்ட விலங்குகளின் மாமிசங்கள்.

6.நகங்களால் வேட்டையாடும் விலங்குகள், பறவைகள்.

7.பற்களால் கடித்து வேட்டையாடும் விலங்குகள்.

8.நீர் நிலம் இரண்டிலும் வாழக்கூடிய உயிரினங்கள்.

9.ஊர்ந்து செல்லக்கூடிய உயிரினங்கள்.

10.இறைச்சியை உண்ணும் உயிரினங்கள்.

11.தோலைத் தனியாக உரிக்க முடியாத உயிரினங்கள்.

12.கழிவுகளை உண்ணும் உயிரினங்கள்.

13.நீரை நக்கி குடிக்கும் உயிரினங்கள்.

14.விசத்தன்மையுடைய மற்றும் மனிதர்களுக்குத் தீங்கை விளைவிக்கக் கூடிய தாவரங்கள் பழங்கள்.

போன்றன அமைகின்றன. இவற்றைத் தவிர்த்து மற்ற சுத்தமான விஷத் தன்மையற்ற அத்தனை பழங்களும், தாவரங்களும், கிழங்குகளும், விலங்குகளும், கடல் வாழ் உயிரினங்களும் மனிதர்களுக்கு உணவாக உட்கொள்ள அனுமதிக்கப்பட்டவை.



اِنَّمَا حَرَّمَ عَلَيْکُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ بِهٖ لِغَيْرِ اللّٰهِ‌ۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثْمَ عَلَيْهِ‌ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்... (அல்குர்ஆன் : 2:173 )